Monday, March 6, 2017

Chennai History & Growth - சென்னை வரலாறும் அதன் வளர்ச்சியும்



375 ஆண்டுகளுக்கு முன்பு கோரமண்டல் கடற்கரை என்ற பெயர் பெற்ற வங்கக் கடலின் கரையோரம் மதராஸப்பட்டினம் என்ற பெயரில் சின்னஞ்சிறு கிராமமாக இருந்தது. சென்னை, மைலாப்பூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், திருவொற்றியூர் என்று பல்வேறு சிறுசிறு கிராமங்களாகவும், சிறு சிறு குறு நகர்களாகவும் காணப்பட்டது. அந்தக் கால் சென்னைப் பட்டினம், புதர்கள், காடுகள் மரங்கள் சூழ்ந்த இந்த ஊர்களுக்கு இடையே கூவம், அடையாறு போன்ற ஆறுகள் ஓடின. திராவிட நாகரிகத்தின் உறைவிடமாக திகழும் சென்னை, தென் இந்திய கட்டிட வேலைப்பாடு, பாட்டு, இசை, நடனம், நாடகம் மற்றும் இதர கலைகளின் ஊற்றாகவும் காட்சி அளிக்கிறது. மிகப்பெரிய வர்த்தக, தொழிற்துறை நகரமாகவும் சென்னை விளங்குகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை, இந்திய வாகன உற்பத்தி தலைநகராக விளங்கும் சென்னையில்தான் உள்ளன. சென்னையில் உள்ள 12 கிலோமீட்டர் நீள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது  நீளமான கடற்கரையாக  திகழ்கிறது. புதுமையும் பழமையும் கலந்த நகராக இருக்கிறது. 200 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள இந்த நகரம் மேலும் விரிவடைந்து வருகிறது.
இந்தச் சென்னைப்பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாசனை திரவியம் மற்றும் ஜவுளி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்தது. போர்ச்சுகீசியர்களின் வருகைக்குப் பிறகே அது வளர்ச்சி அடையத் தொடங்கியது. கி.பி.1552ஆம் ஆண்டில் போர்ச்சுக்கீசியர்கள் சாந்தோமில் குடியேறி வியாபாரம் செய்தனர்.
சென்னைப் பட்டினத்தில் விலை உயர்ந்த ஜவுளி மூலப்பொருட்கள் கிடைத்தன. இதைக் குறிவைத்து இங்கு கால் பதிக்க ஆங்கிலேயர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிழக்கிந்திய கம்பெனி, பிரான்சிஸ் டே, ஆன்ட்ரு கோகன் ஆகிய இரண்டு அதிகாரிகளைச் சென்னைப் பட்டினத்திற்கு அனுப்பி வைத்தது. வணிக மையம் கட்டுவதற்காகச் சென்னைப் பட்டினத்தில் இடம் பார்க்க வேண்டிய பொறுப்பு டேக்கு அளிக்கப்ப்டடது. கம்பெனியின் வியாபாரத்திற்காக ஒரு நல்ல இடத்தைத் தேடி டே பயணித்தபோது மைலாப்பூர் பற்றிக் கேள்விப்பட்டார். ஒரு நாள் மாலையில் பிரான்ஸிஸ் டே ஆங்கிலேயர்  கப்பலில் மைலாப்பூர் கரையில் இறங்கினார். அவர் கண்களுக்குத் தெரிந்த கடற்கரை மணல் பரப்பு அவரை மிகவும் கவர்ந்தது. தான் வந்த வேலை முடிந்து விட்டது என்றே  முடிவு கட்டினார். இதுதான் கம்பெனிக்கு ஏற்ற இடம் என்று அவர் முடிவு செய்தார்.
மைலாப்பூர் போர்ச்சுக்கீசியர்களின் வியாபார மையமாக இருந்தது. அதன் அருகிலேயே தங்கள் வியாபார மையம் அமைய வேண்டும் என டே முடிவு செய்தார்.
அப்படி அவர் வரும்போதுதான் மைலாப்பூரின் அழகில் மயங்கி நின்றார். மைலாப்பூர் மட்டுமல்ல மதராஸ் முழுவதுமே அவர் கண்களுக்குக்கு கவர்ச்சி மிகுந்த ஒரு பெண்ணைப் போலக் காட்சியளித்தது என்று, ‘சென்னையின் கதை எனும் நூலை 1921ல் எழுதிய கிளின் பார்லோ குறிப்பிடுகிறார்.
பிரான்ஸிஸ் டேக்கு மதராஸ் பிடித்துப்போனதற்குக் காரணமே கூவம் நதிதான் என்கிறார் பார்லோ. அந்தக் காலத்தில் இந்த நதிக்குத் திருவல்லிக்கேணி ஆறு என்ற பெயரும் உண்டு. அந்த ஆற்றை அவர் கண்ட சமயம் குளிர்காலம். ஆற்று நீர் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
வங்கக் கடலை ஒட்டி மைலாப்பூருக்கு அருகே உள்ள பகுதியை வாங்க வேண்டும் என்று டே தீர்மானித்தார். அப்பகுதியை ஆண்டுவந்த நாயக்க மன்னர்களிடம் பேச்சு வார்த்தையைத் தொடங்கினார். ஆனால் நாயக்க மன்னரால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியான சந்திரகிரி மன்னனுக்கு நாயக்க மன்னர்கள் கப்பம் கட்டி வந்தார்கள். எனவே இந்த நில பேரத்துக்கு சந்திரகிரி மன்னரின் ஒப்புதல் தேவைப்பட்டது.
பிரான்ஸில் டே சந்திரகிரி மன்னரைப் பார்த்து பேசினார். தான் விரும்பிய இடத்தை விலை கொடுத்து வாங்கினார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது 1639ம் ஆண்டு ஆகஸ்டு 22 ம் நாள். அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.
சென்னையில் இடம் வாங்குவதற்காகப் போடப்பட்ட இந்த வணிக ஒப்பந்தம் பின்னாளில் இந்திய மண்ணில் ஆங்கிலேய ஆட்சி உதயமாகக் காரணமாக அமைந்தது.
ஆங்கிலேயர்கள் சென்னைப் பட்டினத்தை நவீன வசதிகள் கொண்ட நகரமாக உருவாக்கும் முயற்சியைத் தொடங்கினார்கள். லண்டனில் தாங்கள் அனுபவித்தும் வரும் சகல வசதிகளும் இங்கே கிடைக்க வேண்டும் என்பதற்கான காரியங்களைத் தொடங்கினார்கள். டேயும் அவரது மேலதிகாரியான ஆண்ட்ரு கோகனும் சேர்ந்து மதராஸில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். இதன் காரணமாக 1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின்  ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாகத் தேர்வு செய்யப்பட்டது.
ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது.
சென்னை நகரம் மிகக்குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் வணிக மையத்தையும், செயிண்ட் ஜார்ஜ் கோட்டையையும் கட்டினார்கள். இப்படித்தான் இன்று நாம் பார்க்கும் சென்னை நகரம் உருவாகியது இதனால்தான் சென்னையில் ஆங்கிலேயர்கள் இடம் வாங்கிய ஆகஸ்ட் 22ஐ சென்னையின் பிறந்த நாளாகக் கொண்டாடி வருகிறோம்.
பாதுகாப்பை கருத்தில் கொண்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. வணிக வளாகம் கட்டப்பட்டதால் ஐரோப்பியர்கள் நிறையப்பேர் வந்தனர். அவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிலும் வீடு கட்டிக் குடியேறினர். அந்தப் பகுதி வெள்ளைப் பட்டினம் என்று அழைக்கப்ப்டடது. அதற்கு வெளிப்புறப் பகுதியில் ஆந்திராவில் இருந்து வந்த ஏராளமான நெசவாளர்கள் குடியேறினர். இது கறுப்புப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதிதான் பின்னர் ஜார்ஜ் டவுன் ஆனது.
இந்த இடத்தை மையமாகக் கொண்டு தொடங்கிய ஆங்கிலேயர்களின் வர்த்தகம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னைப் பட்டினம் என்றும், தெற்குப் பகுதி மதராஸப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது. இந்த இரண்டு பட்டினங்களையும் ஒன்று சேர்த்து ஆங்கிலேயர்கள் மதராஸப்பட்டினம் என்றும், தமிழர்கள் சென்னைப் பட்டினம் என்றும் அழைத்தனர். விரைவிலேயே சென்னைப் பட்டினம் முழுவதும் கிழக்கிந்தியக் கம்பெனியின் வசமாயிற்று. தங்கள் படை பலத்தாலும், பண பலத்தாலும் தந்திரமான முயற்சிகளாலும் ஆங்கிலேயர்கள் இதைச் சாதித்தார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலூன்றுவதற்கு முக்கியமான களமாகச் சென்னை அமைந்திருந்தது.
1653ல் சென்னைப்பட்டினம் சென்னை மாகாணமாக மாறியது. அதன் பின்னர் 1702ல் முகலாயர்களாலும், 1741ல் மராட்டியர்களாலும் அது தாக்குதலுக்கு உள்ளானது. 1746ம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கைவசமானது. பின்னர் ஆங்கிலேயர்களின் கைக்குப் போனது. 1758ல் மீண்டும் பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றினர். ஆனால், இரண்டு மாதங்களிலேயே ஆங்கிலேயர்கள் சென்னையைத் திரும்பவும் மீட்டனர். 


Madras or Chennai City Old Map in 1909


அன்று முதல் 1947ம் ஆண்டு வரை சென்னை மாகாணம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சுதந்திரத்திற்குப் பின், சென்னை மாகானம் 1968ம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மெட்ராஸ் என்று இருந்த பெயர் 1997ம் ஆண்டு சென்னை என்று மாற்றப்பட்டது.
30 ஆயிரம் மக்கள் தொகையுடன் உருவான சென்னை நகரின் மக்கள் தொகை தற்போது ஒரு கோடியைத் தாண்டி விட்டது. சென்னை நகரின் பரப்பும் விரிவடைந்துகொண்டே போகிறது.

No comments: